Monday, October 27, 2014

Music that will blow your mind to pieces...(உங்களது சிந்தனையை தகர்த்து சிதறடிக்கும் இசை...)

ஒருவன் தன்னைக் கடந்து தன்னைச் சுற்றிலும் இருந்து வருகிற எல்லாவிதமான புரிதல்கள், ஆலோசனைகள்;, இலக்குகள், இலட்சியங்கள், அனுபவங்கள், உணர்ச்சிகள் (கோபம்,காதல்,ஆசை,வெறுப்பு...) தெளிவுகள், எதிர்ப்புகள் போன்றவற்றின் மீதான ஒருதலைப்பச்சமான சார்தல் இன்றி சுதந்திரமான தனக்குரிய சுதந்திர நினைப்பை, சிந்தனையோட்டத்தை கொண்டிருப்பதே விடுதலைப் பெற்ற மனிதன் என்பதன் அர்த்தம்;. இதனடிப்படையிலேயே பின்வரும் கட்டுரையை எந்த ஒரு சார்புத்தன்மை, நிலைப்பாடு எடுக்காமல், விருப்பு வெறுப்பின்றி வாசிக்குமாறு ஆக்கபூர்வமான அழைப்புவிடுக்கின்றேன்.

ஒவ்வொரு காலக்கட்டத்தின் இசைப்படைப்பும் அந்தச் சமுகத்தின் நாடித்துடிப்பையும் படைப்பாளியின் ஆளுமையையும் ஏறத்தாழ உணர்த்துகிறது. அதுமட்டுமல்லாமல் அவ்விசைப்படைப்பாளனை உருவாக்குகின்ற, வளர்க்கின்ற சாதாரண சமானிய பார்வையாளனின் (நான் அவனின் ரசிகனில்லை...ஆனாலும்... - என்று சொல்லுகிற வர்க்கத்தின்) தனிப்பட்ட ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது (not only the collective pulse/personality but also the individual pulse/ personality).  ஏனெனில் தரம் தாழ்ந்த நகைச்சுவை உங்களை சிரிக்க வைத்தால்... களிவெறி நடனமும் இசையும் உங்களை மயங்க வைத்தால்.. உங்களுடைய ரசனையிலிருந்து அந்த ரசனை உங்களிடம் தோற்றுவிக்கும் உணர்ச்சிகளிலிருந்து உங்களுக்குள்ளேயே வேறொரு ஆளுமை உருவாகிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

இதனடிப்படையிலேயே சமீபகாலத்திய திரையிசைப் பாடல்கள் 
காதலைப் பாலியல் வெறியாகவும், 
மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும், 
துயரத்தை விரக்தியாகவும் 
மடை மாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசை ரசனையையும், வாழ்வியல் மதி;ப்பீடுகளையும், அதனூடாக சமூக உணர்வையும், தனிப்பட்ட உணர்வையும் சிதைப்பதில் வெற்றி கண்டுள்ளது என்று என் மனது மிக ஆவேசமாக அறைந்துகொண்டிருக்கிறது.

இசை என்பது உடலியல் இன்பத்தில் துவங்கி (உதாரணம் : தப்பாட்டம் (பறை)) உளரீதியான கிளர்ச்சியாக மாறுகிறது. நாமே அறியாதவண்ணம் நம் உள்ளத்தின் அடியாழத்தில் தேங்கிக் கிடக்கும் உணர்ச்சிகளை மேலெழச் செய்கிறது...ஆக சிறிது சிறிதாக குறிப்பிட்டதொரு மனநிலையை நம்மிலே நம்மை அறியாமலே இசை உருவாக்குகிறது. 
இங்கேதான் நாம் கவனிக்கவேண்டியது நிறைய உள்ளது.

ஒரு குறிப்பிட்ட இசைக்கு குழந்தை வெளிப்படுத்துகிற reaction- யை போன்றது அல்ல நமது reaction. உதாரணமாக தாலாட்டு பாடலை கேட்கும் குழந்தை முற்றிலுமாக அதை புரிந்துகொள்வதில்லை அல்லது உள்வாங்குவதில்லை - அதன் இராக-தாள நயங்களை, அதனுள் மறைந்து பொதுந்துள்ள கவிதை, பொருள்... etc. ஆனால் நம்மைப் பொறுத்தவரை தாளம், இராகம், மறைந்துள்ள கவிதை இவை வழியாக உணர்வு நிலையின் உச்சதிற்கு நம்மை முழுமையாக்கிவிடுகிறோம். இதன்விளைவாக கண்ணீர், மகிழ்;ச்சி, வெடிச்சிரிப்பு, சோகம், ஏக்கம் என்று எந்த வகையான உணர்வுகளை நம்மிடம் திரையிசை தோற்றுவித்தாலும் சரி, அது உண்மையாகவே வாழ்க்கையில் உரிய தருணத்தில் உண்மையான உணர்ச்சியாக மாறியே தீரும் பகுத்தறிவின் துணைகொண்டு அதன் பிடியிலிருந்து நாம் விடுபாடாத வரை.

இதை நாம் அறியாமல் இருந்தாலும், மறுத்தாலும்....இது தான் உண்மை.  

நன்றி :  எனது மேற்கண்ட நிலைப்பாட்டிற்கும் எழுத்திற்கும் ஆணிவேராக இருந்தது ஐயா. மருதையன் அவர்களின் இசை: போதை, பொழுதுபோக்கு,போராட்டம் என்கிற கட்டுரை.

---- ஆபுத்திரன்



Sunday, October 26, 2014

புத்தக வாசிப்புக்கென்றே ஒரு குட்டி மலையேற்றம்

வீட்டின் எதிரில் மௌனமாய் சோரகை மலை. தீபாவளி சத்தங்கள் இன்னும் ஓய்ந்திருக்கவில்லை. திடீரென மனதில் ஒன்று தோன்றியது…எஸ்.ராமகிருஷ்ணனின் “காஃப்கா எழுதாத கடிதம்” புத்தகம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

சிறிதும் பெரிதுமான சாரல், தூரல் எனத் துவங்கியது மலையேறுதல். தனியாக மலையேறுதல் ஒரு சுகம் தான். அதுவும் மழைத்தூரல்கள் பிடித்து மலையேறுதல்…ம்ம்ம்… முதல் அனுபவம்.

மனதுக்கு தோன்றிய இடத்தில் அமர்வது என முடிவு செய்தேன், நடந்தேன், அமர்ந்தேன், வாசித்தேன்.

புத்தகம் வாசிக்க தோதான பாறைகள், மரத்தடி நிலங்கள், நேற்று பெய்திருந்த மழையில் தோன்றிருந்த குட்டி நீரோட்டங்கள்… இடையிடையே கிளைகளிலிருந்தும் இலைகளிலிருந்தும் புத்தக வரிகளை நனைத்துச் சிந்தும் மழைத்துளிகள்…இதுவரை கண்டிருக்காத பறவைகள்… மழைக்கால மரவட்டைகளின் ஊருதல்கள்... மெல்லிய மழைச்சாரலின் காற்றில் விலகியசைந்த ஈரம்காய்ந்த சருகுகளின் ஓசை… என விரிந்து பரந்து பெருத்தது என் வாசிப்பு மிருகம். வாசிப்பில் மேய்ந்து திரிந்த மிருகம் மாலையில் தானாக ஒய்ந்ததும் வீட்டுக்கு புறப்பட்டேன்.

குட்டி மலைகளுக்கென்றே ஒரு தனித்துவம் இருக்கிறது. ஒருசில கிராமங்கள் மட்டுமே சூழ அமைந்திருக்கும் இம்மலைகள்… பொதுவாக பெரும்பான்மை மனிதரின் பார்வையிலிருந்து தப்பித்து தன் இயற்கையை, இயல்பை இழக்காமல் தங்களை நிலைநிறுத்திக்கொள்கின்றன….

மழைத்தூரலில் நனைந்தபடியே வீடுதிரும்பினேன். வாசிப்புக்கான சக தோழியாகிவிட்ட சோரகை மலை மழையில் நனைந்திருந்த அழகை வீட்டின் வாசலில் நின்று ஒருமுறை ஏறிட்டு பார்த்தேன். “என்னப்பா பார்க்கிறீங்க”, என்றாள் என் செல்ல மகள்…. சிரித்துகொண்டே அவளை அணைத்தவாறு சிறியதாய் அவள் நெற்றியில் முத்தமிட்டேன். முத்தம் ஈரமாய் இருந்தது. துடைத்துக்கொண்ட அவள் பதிலுக்கு என் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

வாசிப்பு நிறைவுபெற்றதாய் இருந்தது.

குறிப்பு:
•    சோரகை மலையை எனக்கு அறிமுகப்படுத்தியவர் தோழர். செல்வம். இவரின் பொழுதுபோக்கு மரக்கன்று நடுதல் மற்றும் மரங்கள் பாதுகாப்பு. மரங்கள் மற்றும் காடுகள் பற்றிய இவரின் அனுபவம் மற்றும் அறிவு அபூர்வமான ஒன்று.
•    என்ன வாசித்தேன் என்பதை பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.