Sunday, October 26, 2014

புத்தக வாசிப்புக்கென்றே ஒரு குட்டி மலையேற்றம்

வீட்டின் எதிரில் மௌனமாய் சோரகை மலை. தீபாவளி சத்தங்கள் இன்னும் ஓய்ந்திருக்கவில்லை. திடீரென மனதில் ஒன்று தோன்றியது…எஸ்.ராமகிருஷ்ணனின் “காஃப்கா எழுதாத கடிதம்” புத்தகம் எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.

சிறிதும் பெரிதுமான சாரல், தூரல் எனத் துவங்கியது மலையேறுதல். தனியாக மலையேறுதல் ஒரு சுகம் தான். அதுவும் மழைத்தூரல்கள் பிடித்து மலையேறுதல்…ம்ம்ம்… முதல் அனுபவம்.

மனதுக்கு தோன்றிய இடத்தில் அமர்வது என முடிவு செய்தேன், நடந்தேன், அமர்ந்தேன், வாசித்தேன்.

புத்தகம் வாசிக்க தோதான பாறைகள், மரத்தடி நிலங்கள், நேற்று பெய்திருந்த மழையில் தோன்றிருந்த குட்டி நீரோட்டங்கள்… இடையிடையே கிளைகளிலிருந்தும் இலைகளிலிருந்தும் புத்தக வரிகளை நனைத்துச் சிந்தும் மழைத்துளிகள்…இதுவரை கண்டிருக்காத பறவைகள்… மழைக்கால மரவட்டைகளின் ஊருதல்கள்... மெல்லிய மழைச்சாரலின் காற்றில் விலகியசைந்த ஈரம்காய்ந்த சருகுகளின் ஓசை… என விரிந்து பரந்து பெருத்தது என் வாசிப்பு மிருகம். வாசிப்பில் மேய்ந்து திரிந்த மிருகம் மாலையில் தானாக ஒய்ந்ததும் வீட்டுக்கு புறப்பட்டேன்.

குட்டி மலைகளுக்கென்றே ஒரு தனித்துவம் இருக்கிறது. ஒருசில கிராமங்கள் மட்டுமே சூழ அமைந்திருக்கும் இம்மலைகள்… பொதுவாக பெரும்பான்மை மனிதரின் பார்வையிலிருந்து தப்பித்து தன் இயற்கையை, இயல்பை இழக்காமல் தங்களை நிலைநிறுத்திக்கொள்கின்றன….

மழைத்தூரலில் நனைந்தபடியே வீடுதிரும்பினேன். வாசிப்புக்கான சக தோழியாகிவிட்ட சோரகை மலை மழையில் நனைந்திருந்த அழகை வீட்டின் வாசலில் நின்று ஒருமுறை ஏறிட்டு பார்த்தேன். “என்னப்பா பார்க்கிறீங்க”, என்றாள் என் செல்ல மகள்…. சிரித்துகொண்டே அவளை அணைத்தவாறு சிறியதாய் அவள் நெற்றியில் முத்தமிட்டேன். முத்தம் ஈரமாய் இருந்தது. துடைத்துக்கொண்ட அவள் பதிலுக்கு என் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

வாசிப்பு நிறைவுபெற்றதாய் இருந்தது.

குறிப்பு:
•    சோரகை மலையை எனக்கு அறிமுகப்படுத்தியவர் தோழர். செல்வம். இவரின் பொழுதுபோக்கு மரக்கன்று நடுதல் மற்றும் மரங்கள் பாதுகாப்பு. மரங்கள் மற்றும் காடுகள் பற்றிய இவரின் அனுபவம் மற்றும் அறிவு அபூர்வமான ஒன்று.
•    என்ன வாசித்தேன் என்பதை பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.


No comments:

Post a Comment