Tuesday, May 3, 2011

என்னை அப்படி கூப்பிடாதே!


பெயரில் என்ன இருக்கிறது…. ஆனால் அவனை பார்த்தபின்பு நிறைய இருக்கிறது என்றே தோன்றியது. அழகான கிராமம். சுற்றிலும் மலை சூழ்ந்த சூழல். மலையடிவாரத்தில் தம்புரான்சாமிக் கோவில். கள்ளம்கபடமில்லாக் காற்று. இத்தனை அழகையும் அமைதியையும் உள்வாங்கிய வெள்ளந்தியான மக்கள். அந்த வெள்ளந்திதனத்தைதான் உருவகப்படுத்தி அவனுக்கு ‘வெள்ளயன்’ என பெயரிட்டிருந்தனர். அனைவரும் செல்லமாய் ‘வெள்ளையா’, ‘வெள்ளை’ என அழைத்தனர். ஆனால் அவன் தன் பெயர் குறித்து வெட்கப்பட்டான். ‘ஏன் வெட்கப்படவேண்டும்?’, எனக் கேட்டபொழுதெல்லாம் ‘பெயர் நல்லா இல்லை சார்’ என்று மிக சாதாரனமாக விலகினான். என்னால் அவ்வளவு எளிதாக விலக முடியவில்லை. ஒருவன் தன் பெயர் குறித்து ஏன் வெட்கப்பட வேண்டும்?
பெயர் ஒரு வரலாறு. பெயர் ஒரு பாரம்பரியம். பெயர் ஒரு சமூகம். பெயர் ஒரு அடையாளம். பெயர் ஒரு அதிகாரம். பெயர் ஒரு வாழ்வுமுறை (டகைந ளவலடந).
சீனாவை, ஜப்பானைச் சார்ந்தவன் ‘சிங் சுங் ஜியாங்….’ என்று வைத்துக்கொள்வதில் வெட்கப்படுவதில்லை. மாறாக தன் பெயரை உலகமே உச்சரிக்கட்டும் என நினைக்கிறான் - ‘சாமுராய்’ என்பது ஒரு ஜப்பானிய பழங்குடி இனத்தின் பெயர் - ‘வாள்’, அதன் அடையாளம் - அப்பெயரையும் அதன் அடையாளத்தையும் தான் உருவாக்கிய நான்குசக்கர வாகனத்திற்கு சூட்டி பெருமிதம் கொள்கிறான். ‘சாமுராய்’, என்பது என்ன என்பதைப் பற்றியும், அந்த இனத்தின் பாரம்பரியம், பெருமை, வீரம் செரிந்த வரலாறு என்ன என்பதைப்பற்றியும் அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை - இருந்தபோதும் ‘சாமுராய்’ என்கிற பெயரை அறியச் செய்து பெருமை கொள்கிறான்;. இன்னும் ஒர் உதாரணம் ‘சுமோ’ என்கிற காரின் பெயர் ஒரு வகை ஜப்பானிய விளையாட்டின் பெயராகும்.
இவையனைத்திலும் கவனிக்கப்படவேண்டியது – ‘அவன் ஏன் தன் பெயர் குறித்து வெட்கப்படவில்லை என்பது’ – ஆராய்ந்து பார்த்தால் சிறுவயது முதலே தன் இனம், அந்த இனத்திற்கான மொழி, இனம் மற்றும் மொழிக்கான கலை சிறப்பு, இவையனைத்தின் வரலாறு, என ‘தன்னை’ குறித்த தனித்தன்மையில் பெருமை கொள்ளவும், அதையே பின்பு நிலைநிறுத்திக் கொள்ளவும் அறிந்திருந்தான். அறிவுறுத்தவும்-பட்டிருந்தான்.  தன் பாரம்பரிய வேரைப் பற்றிய அறிவும் பாடமும் அவனுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. ஆக தன் இனத்தை அல்லது தன்னைப் பற்றிய  வரலாற்றோடு கூடிய  தனித்துவம் தெரிகின்றபோது அதைப் பற்றிய அழகும் பெருமையும் ஒருவனுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது.
‘சனியன்’ என்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி இருந்தார். அவரும் சிறுவனாய் இருந்தபோது தன் பெயர் குறித்து வெட்கப்பட்டவர்தான். ஆனால் பெயரின் வரலாற்று அறிவும், வேரும் அவருடைய தமிழாசிரியரால் அவருக்கு அறிவுறுத்தப்பட்டபோது தன் பெயர் குறித்த வெட்கம் மறைந்துபோயிற்று. இன்று சனியன் கையெப்பமிடாமல் எந்த ஃபைலும் நகருவதில்லை, செயல்படுத்தபடுவதுமில்லை.
மேலும் ‘பெயர்’ என்பது எனக்கான அடையாளத்தை உருவாக்குவதில்லை. நான் தான் என் பெயருக்கான அடையாளத்தை உருவாக்குகிறேன். மார்க்ஸ், லெனின், சுபாஷ் சந்திரபோஸ், சானியா மிர்சா, காந்தி, இந்திராகாந்தி, கருணாநிதி, என்கிற பெயர்கள் இன்று ஒருவித தத்துவத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் அடையாளமாகியிருக்கின்றன். இந்த அடையாளங்கள் அந்தந்த நபர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதே வேளையில் பெயர்கள் ஒருவனுடைய சமூக அடையாளமாகிப்போகும் கொடுமையும் நிகழ்கிறது. 

No comments:

Post a Comment