Monday, February 12, 2024

அம்மாவ பிடிக்குமா? அப்பாவ பிடிக்குமா?

குழந்தைகளிடம் நாம் வழக்கமாக விளையாட்டாக கேட்கும் கேள்விகளில் ஒன்று...

"உனக்கு அம்மாவ பிடிக்குமா இல்ல அப்பாவ பிடிக்குமா?" என்பது. 

நம்மில் பலரும் இப்படி கேட்டிருப்போம் இல்லையா?

உண்மையைச் சொல்லனும்னா...
... இயல்பாகவே அம்மாவிடம் தான் ஒரு குழந்தை அதிக நெருக்கம் கொண்டிருக்கும். கரு உருவானதிலிருந்து ஏறக்குறைய பத்து மாதங்கள் தாயினுடைய உடலின் ஒரு பகுதியாக வாழும் ஒரு குழந்தை உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மற்றவரைவிட தன் தாயிடம் தானே நெருக்கம் கொள்ள முடியும்? அது தான் இயல்பானதும் கூட.

 அப்புறம் எப்படி சில குழந்தைகள் தந்தையிடம் ஒட்டிக்கொள்கின்றன?

ஒரு தந்தையும் தன் குழந்தையிடத்தில் ஒரு தாய்க்கு இணையான நெருக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்ன? அது சாத்தியமா?

ஆமாம் முடியும். 

குழந்தை பிறப்பதற்கு முன், தந்தை தன் குழந்தை தாயின் வயிற்றிலிருக்கும் போதே  தாயிடமும் குழந்தையிடமும்  அன்போடு உரையாடுவது மற்றும்  தொடர் உணர்வு செயல்பாடுகளான தாயின் வயிற்றை தடவிக்கொடுத்தல், முத்தம் கொஞ்சுதல் வழியாகவும், பிறகு குழந்தை பிறந்தபின் குழந்தையை தாங்கிக்கொள்ளுதல், மார்போடு  அணைத்துகொள்ளுதல், உரையாடுதல் எனத்தொடங்கி விளையாடுதல் வரையிலான செயல்பாடுகள் வழியாக,  தாய் கொடுக்ககூடிய அதே நெருக்கமான உணர்வை  குழந்தையினிடத்தில் உருவாக்கமுடியும்.

இதை இன்னும் எளிமையாக புரிந்துகொள்ள ஹேரி ஹார்லோ (Harry Harlow) என்னும் அமெரிக்க உளவியலாளர் ( American psychologist) 1960s - களில் குரங்குகளை வைத்து செய்த ஆராய்ச்சியை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

ஹார்லோ, 
தாயிடம் இருந்து பிரித்தெடுத்த குரங்குகளை  இரண்டு வகையான
"பதிலித் தாய் பொம்மைகளை" ( surrogate mother) வைத்து சோதனைக்கு உட்படுத்தினார்.

மரக்கட்டை மற்றும் ஒயரினால் செய்யப்பட்ட  பொம்மைத்தாயிடம் பால்( உணவு ) மட்டும் கிடைக்குமாறும், பஞ்சினால் செய்யப்பட்ட  மற்றொரு  பொம்மைத்தாயிடம் பால் ( உணவு) கிடைக்காதவாறு பார்த்துகொண்டார்.

குரங்குகள் பெரும்பாலும் பஞ்சினால்  செய்யப்பட்ட பதிலித்தாயிடமே அதிகம் அடைக்கலம் கொண்டிருந்தன. பசித்த போது மட்டுமே கட்டை மற்றும் ஒயரினால் செய்யப்பட்ட பதிலித்தாயிடம் வந்தன.

மேலும், சத்தமிடும் ஒரு பொம்மையை கூண்டில் வைத்தபோது பயத்தில் அவை வேகமாக ஓடிச்சென்று பஞ்சினாலான பதிலி தாய்க்குரங்கை  கட்டிக்கொண்டன.

ஆக தொடுதல் உணர்வு சார்ந்த செயல்பாடுகள் ஒரு குழந்தையினிடத்தில் அதிக நெருக்கத்தையும், பாதுகாப்பு உணர்வையும், ஒரு comfort zone  - யையும் உருவாக்க முடியும்.

எனவே இப்போ  சொல்லுங்க...

உங்க குழந்தை அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா? 

அம்மா மட்டுமல்ல
அப்பாவும் அம்மாவுடன்  இணைந்து ஒரு குழந்தைக்கு அழகான நெருக்கமான ஒரு உணர்வை கொடுக்கமுடியும் தானே?

- தொடர்ந்து பேசுவோம்

அந்துவன் கபிரியேல் 
கலைடாஸ்கோப்

No comments:

Post a Comment