Friday, February 16, 2024

நீங்க பாஸா? பெய்லா? - PART 1 (PARENT ELIGIBILITY TEST - PET)

கி.மு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 17 ஆம் நூற்றாண்டு வரை ஏறக்குறைய 40 க்கும் மேற்பட்ட தமிழுக்கான இலக்கண நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் தொல்காப்பியத்தை பற்றி நம்மில் பலருக்கும் தெரியும் - இது தொல்காப்பியரால் கி.மு 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு, அதன் வழிநூலாக, அதாவது  வழிகாட்டி நூலாக எழுதப்பட்டது தான் "நன்னூல்" என்னும் இலக்கண நூல். கி.பி 12ம்/13ம் நூற்றாண்டில் பவணந்தி என்னும் சமண மத முனிவரால் இது எழுதப்பட்டது.  

இந்த கட்டுரையில் "நன்னூல்" பற்றிய சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

பொதுவான இலக்கணம் பற்றி பேசும் இந்நூல், ஒரு ஆசிரியருக்கான இலக்கணம் பற்றியும் பேசுகிறது.

அதாவது...
ஒருவர் ஆசிரியராக இருப்பதற்கான இலக்கணம் மற்றும் ஒரு பாடத்தை  நடத்துவதற்கான  இலக்கணம், 
...என எல்லாவித இலக்கணங்களையும் பேசுகிறது "நன்னூல்".

உதாரணத்திற்கு,  ஆசிரியருக்கான இலக்கணமாக பின்வரும் குணநலன்களை குறிப்பிடுகிறது. 

ஆசிரியர் என்பவர் நிலம், மலை, நிறைகோல் (தராசு), மலர் போன்றவற்றினையொத்த குணநலன்களை கொண்டிருப்பார் என உரைக்கிறது.

கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.
முதலாவதாக, நிலம் -  அதாவது நிலத்தை போன்று பரந்துவிரிந்து, எல்லையில்லா வகையில் கல்வியறிவு கொண்டிருத்தல். நிலம் எவ்வளவு பாரத்தையும் சுமப்பது   மட்டுமல்லாமல், மனிதர்கள் அகழ்தல், பிளத்தல் முதலிய தவறுகளை செய்தாலும், தம்மை வருத்துபவரையும் தாங்கும் உறுதியையும் பொறுமையையும் கொண்டிருத்தல் மற்றும் பருவத்தில் உழுகின்றவரின் (உழைக்கின்றவரின்) முயற்சிகளுக்கு தகுந்த பலன்களை தருதல் என நிலத்தின் குணங்களை பெற்றிருப்பார்.

இரண்டாவதாக, மலை -  அதாவது மலையைப் போல், தன் கல்வியறிவால் பெரியவராயிருப்பார்.  மலையானது, பலவற்றை தன்னிடத்தில் கொண்டிருப்பதுபோல் பலவித  புலமையை கொண்டிருப்பார். அவரை காணாதவரும் (தூரத்தில் இருப்பவரும்) அவரைப் பற்றி தெரிந்து கொள்ளும் அளவிற்கு உயர்ந்த புகழை கொண்டிருப்பார். தம்மிடம் வரும் மாணவர்கள் வசதி வாய்ப்பு இன்றி போதனைக்குரிய  போதிய  ஊதியம் ( செல்வத்தை) கொடுக்க இயலாத போதிலும் தம்மிடமுள்ள கல்விச் செல்வத்தை   அள்ளித்தருபவராய் இருப்பார்.

மூன்றாவதாக நிறைகோல் ( தராசு) - தராசைப் போன்று எவ்வித பாரபட்சமுமின்றி நடுநிலையுடன் கற்பிப்பவராக இருப்பார்.

இறுதியாக மலரைப் போல் நன்மையானவற்றிற்கு உரியவராகவும், இனியவராகவும், மென்மையான பண்பு கொண்டவராகவும், கற்பிப்பதில் முகம் மலர்ந்தவராகவும் இருப்பார்.

எப்படி இருக்கிறது ஒரு ஆசிரியருக்கான இலக்கணம், பார்த்தீர்களா? இப்போது நம்மிடம் வருவோம்.

ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் பெற்றோர், இரண்டாவது பெற்றோர் ஆசிரியர் என சொல்லப்படுகிறது. ஏதோ ஒருவகையில் ஆசிரியராகவோ, பெற்றோராகவோ குழந்தைகளோடு பயணிக்கும் நமக்கு மேற்கூறிய குணங்களை குறித்து நம் குழந்தைகள் ஒரு exam  - Parent Eligibility Test or Teacher Eligibilty Test   வைத்தால் நாம் பாஸ் ஆகிவிடுவோமா? 

நினைத்து பார்க்கவே ஜாலியாக இருக்கிறது அல்லவா? ம்...ம்...ம்... சிலருக்கு இப்பவே exam fever வந்திருக்கும்.
 
தொடர்ந்து பேசுவோம்.

அன்புடன்
அந்துவன் கபிரியேல்
கலைடாஸ்கோப்
____________________________
குறிப்பு : நன்னூல் பாடல்கள் 26  - 30 ஆசிரியர் இலக்கணம் பற்றி பேசுகிறது.

No comments:

Post a Comment