முந்தைய கட்டுரையில், நன்னூல் பேசிய ஆசிரியருக்கான இலக்கணமாக சிலவற்றைப் பார்த்தோம்.
அப்படியென்றால் மாணவர்களுக்கான இலக்கணம் பற்றியும் " நன்னூல்" ஏதேனும் பேசியிருக்கிறதா?
ஆமாம் பேசியிருக்கிறது.
எத்தனை வகையான மாணவர்கள் இருக்கிறார்கள், அவர்களை ஆசிரியர்கள் எப்படி புரிந்துகொள்ளலாம் என்பதைப் பற்றி பேசியிருக்கிறது.
பின்வரும் பாடலை கவனியுங்கள்.
"அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்."
அதாவது இப்பாடல்
மாணாக்கர்களை
அன்னம் , பசு, மண், கிளி, இல்லிக்குடம் (ஓட்டைக்குடம்), ஆடு, நெய்யரி ( வடிகட்டி) போன்றவர்களாக வகைப்படுத்துகிறது.
சரி அது என்ன அன்னம், மா போன்றவை ?
சற்று விரிவாகப் பார்ப்போம்.
அன்னம், பாலையும் தண்ணீரையும் பிரித்து அருந்தும் இயல்பு உடையது. அது போல சிறந்த மாணவர்கள் தேவை இல்லாததை விட்டு விட்டு தேவையானதை மட்டும் படிப்பார்கள்.
பசு, புல்லைக் கண்டதும் வயிறு முட்ட வேகமாக நிரப்பிக் கொண்டு,பின் ஆற அமர அசை போடும். அது போல சிறந்த மாணவர்கள் நல்ல ஆசிரியரையோ , புத்தகத்தையோ கண்டால் வேகமாக முடிந்த வரை அறிவை பெற்றுக் கொண்டு பின் தனிமையில் அதைப் பற்றி ஆராய்ந்து, சிந்தித்து தெளிவு பெறுவார்கள்.
இது இரண்டும் முதல் தரமான மாணவனின் இலக்கணம்.
"மண்ணோடு கிளியே" - இடை மாணவனுக்கு இலக்கணம்.
ஒரு உழவன் எவ்வளவு பாடு படுகிறானோ அந்த அளவுக்கு நிலம் (மண்) பலன் தரும். அது போல இடை மாணவன், ஒரு ஆசிரியர் எவ்வளவு கஷ்டப்பட்டு சொல்லித் தருகிறாரோ அந்த அளவு அவனும் படிப்பான். அதுக்கு மேலே படிக்க மாட்டான். பாடநூலில் என்ன இருக்கிறதோ அவ்வளவு தான் படிப்பான். மேற்கொண்டு படிப்பது எல்லாம் கிடையாது.
கிளி, சொன்னதைத் திருப்பிச் சொல்லும். அது போல இடை மாணவன் ஆசிரியர் சொன்னதை அப்படியே உள்வாங்கி , மனப்பாடம் செய்து மீண்டும் ஒப்பிப்பான். அவ்வளவுதான்.
இந்த இரண்டும் இடை மாணவனுக்கான இலக்கணம்.
"இல்லிக் குடமா டெருமை நெய்யரி - கடை மாணவர்".
இல்லிக் குடம் என்றால் உடைந்த குடம்/ ஓட்டைக்குடம். அதில் எவ்வளவு நீர் விட்டாலும் நிறையாது. நீர் வெளியேறிக் கொண்டே இருக்கும். அதுபோல கடை மாணவனுக்கு எவ்வளவு சொல்லித் தந்தாலும் புத்தியில் ஒன்றும் நிற்காது. மறந்து போவான்.
ஆடு - ஒரு செடியை முழுவதும் உண்ணாது. ஒவ்வொரு செடியிலும் கொஞ்சம் கொஞ்சமாக உண்ணும். எல்லா செடியிலும் வாய் வைக்கும். ஒன்றையும் முழுமையாக உண்ணாது. அது போல கடை மாணவன் ஒன்றையும் ஒழுங்காகப் படிக்க மாட்டான். இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்.... இந்த ஆசிரியரிடம் கொஞ்சம் அந்த ஆசிரியரிடம் கொஞ்சம் என்று நுனிப்புல் மேய்ந்து ஒன்றும் படிக்க மாட்டான்.
எருமை - குளத்தில் நீர் தெளிவாக இருந்தாலும் அதில் இறங்கி, அதை கலக்கி, சேறும் நீருமாக சேர்ந்து குடிக்கும். ஆனால், அன்னம் நீரை விலக்கி பாலை மட்டும் குடிக்கும்.
நெய்யரி என்பது வடி கட்ட உபயோகப் படுத்தும் துணி. வடிகட்டும் துணி நல்லதை எல்லாம் விட்டு விட்டு கசடை தன்னுள் தக்க வைத்துக்கொள்ளும். அது போல, கடை மாணவன், நல்லதை எல்லாம் விட்டு விட்டு, தேவை இல்லாததை பிடித்து வைத்துக் கொள்வான்.
இவ்வாறு
ஒரு ஆசிரியன் தன்னிடம் வரும் மாணவனை சரியாக எடை போட வேண்டும். அப்போதுதான் அவனுக்கு சரியாக பாடம் சொல்லித் தர முடியும் என்கிறது " நன்னூல்"
இப்போது சொல்லுங்கள்...
மாணவனை அறிந்து அதன்படி பாடம் நடத்துவே ஒரு சிறந்த ஆசிரியருக்கான இலக்கணம் இல்லையா?
அப்போது தான் ஆசிரியரும் பாஸ், மாணவரும் பாஸ்.
என்ன சரிதானே?
- தொடர்ந்து பேசுவோம்.
பேரன்புடன்
அந்துவன் கபிரியேல்
கலைடாஸ்கோப்
No comments:
Post a Comment